Skip to content

ஹரிஹர புத்திரன்

பிறப்பு:

திருநெல்வேலி மாவட்டம் – தென்காசி பட்டிணம் – ஹரிஹர அய்யர் மற்றும் சீதாலட்சுமி அவர்களின் மகன் – ஜனனம்: 17-02-1962

படிப்பு:

தொடக்கப்பள்ளி – முனிசிபல் ஒண்ணாம் வார்ட் பள்ளி

மேல்நிலைப்பள்ளி – தென்காசி அரசினர் மேல்நிலைப்பள்ளி

இளநிலை பட்டப்படிப்பு – ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி (பௌதிகம் பிரிவு) – 1981 ஆம் ஆண்டு

வேலை:

1982 – 83 ஆம் ஆண்டு இந்திய அரசாங்க அஞ்சல் மற்றும் தந்தி துறையில் இளநிலை பொறியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்பட்டு, இந்தூர் நகரில் பணியில் சேர்ந்தேன்.  மூன்று வருடங்கள் கழித்து, கர்நாடகா மாநிலத்தில் உள்ள தும்கூர் நகருக்கு, ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க இடமாற்றம் செய்யப்பட்டேன். நான்கு வருடங்கள் கழித்து, கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் நகருக்கு சொந்த விருப்பத்தின் பேரில் இடம்பெயர்ந்து, நான்கு வருடங்கள் தொலைதொடர்பு துறையின் பிராந்திய பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர் பதவியில் பணி செய்தேன். 1989 ஆம் ஆண்டு, முதன் முதலில் கணணியை கையாளும் வாய்ப்பு கிடைத்தது. கணணி என்னை மிகவும் ஈர்த்தது. இதே ஆண்டு, நாகமணி என்ற பெண்ணை திருமணம் செய்து, 1991 ஆம் ஆண்டு, அரவிந்த் ஹரி சங்கர் என்ற ஆண் மகனிற்கு தந்தையானேன்.

அந்த காலம், கணணி எங்கள் துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த காலம். வருங்காலம் கணணிமயமாகும் என்று எங்கோ ஒரு மூலையில் பட்சி சொல்ல, முழுவீச்சில் கணணியை கற்க தொடங்கினேன்.

1993 ஆம் ஆண்டு சொந்த விருப்பத்தின் பேரில், கர்நாடகாவில் உள்ள மைசூர் நகரத்திற்கு இடமாற்றம் செய்துகொண்டு, மீண்டும் தொலைதொடர்பு துறையின் பிராந்திய பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர் பதவியில் எட்டு ஆண்டுகள் பணி செய்தேன். கணணி பற்றிய பல விபரங்களை கற்றறிந்து கணணியே என் உலகம் என்றிருந்தேன்.  2001 ஆம் ஆண்டு, உப கோட்டப்பொறியாளர் பதவி உயர்வு கிடைத்து மேலும் நான்கு ஆண்டுகள் மைசூர் நகரிலேயே, இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான வேலைகள் செய்தேன்.

2005 ஆம் ஆண்டு, மீண்டும் மைசூரில் உள்ள தொலைதொடர்பு துறையின் பிராந்திய பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர் பதவியில் சேர்ந்து, தற்போது வரை பணிபுரிந்து வருகிறேன்.

சுமார் 18 ஆண்டுகள், தகவல் தொடர்பு, கணணி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பாடமாக விபரித்தும், செயல்முறை விளக்கமும் கொடுத்து பணி புரிந்து வருகிறேன்.