1981 ஆம் ஆண்டு, பட்டப்படிப்பு படித்து முடிந்ததும், ஆங்கில தட்டச்சு மற்றும் குறுக்கெழுத்து கற்று, 1982 ஆம் ஆண்டு, முதன் முதலில் என் பட்டணத்தில் இருந்து வெளிஉலகிற்கு பயணத்தை தொடங்கினேன். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஐம்பதிற்கும் மேற்ப்பட்டோர் என் வாழ்க்கை பயணத்திற்கு வழி அனுப்பி வைத்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரத்திற்கு, தென்காசியில் இருந்து சென்னை வழியாக என் பயணம் தொடங்கியது.
நான் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள், இரண்டு தம்பிகள் மற்றும் இரண்டு தங்கைகள். எங்கள் வீட்டில் அத்தை பையன், மாமன் பையன் என எல்லோரையும் சேர்த்து, 15 பேர் வசித்து வந்தோம். எங்கள் பொழுதுபோக்கு: குமுதம், ஆனந்த விகடன், கல்கி, பேசும் படம் போன்ற பத்திரிக்கைகள், திரைப்படம், கோவில் திருவிழா, வீட்டுவேலை, உடன்பிறப்புகள் உடனான சச்சரவுகள், பள்ளிப் படிப்பு, குதூகலம், கேளிக்கை, சாமி பூஜை, ஸ்லோகம், இலங்கை வானொலி, பட்டிமன்றம் என அடிப்படை நடுத்தர அக்ராஹர வாழ்க்கை.
ஆங்கில வழியில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருந்தாலும், தமிழில் மட்டுமே உரையாடும் நிலையில், வேறு மொழிகள் தெரியாமல், அரைகுறை ஆங்கில அறிவுடன், பயணம் தொடங்கியது.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில், நான் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கியிருந்தாலும், என் நிலை அறியாது மொழி தெரியாத, இடம் தெரியாத போபாலுக்கு பயணம் தொடங்கியது. எனக்கு தெரிந்தவர் எல்லாம், என் மாமன் பையன் ஒருவன், என் அப்பாவின் மாப்பிள்ளை அண்ணனின் பையன் மற்றும் என் அண்ணன் என மூன்று பேர்தான். அப்போது இவர்கள் போபாலில் வேலையில் இருந்தனர்.
முதன் முதலில், சென்னையில் அக்கா வீட்டிற்கு வந்து இறங்கினேன். சிறிய இடத்தில், அக்கா, அத்தான், அவர் தம்பிகள், மாமியார் என ஐந்து பேர் வாழ்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜி டி எக்ஸ்பிரஸ் ஏறி, போபாலை நோக்கி பயணம் தொடர்ந்தது. நாற்பது மணிநேர நீண்ட பிரயாணம். வாயில் நுழையாத பல ஊர் பெயர்கள், வழி நெடுக வேடிக்கை பார்த்துக்கொண்டே அதிகாலை இரண்டு மணி அளவில் போபாலை அடைந்தேன். என் அண்ணன் வந்து அழைத்துச்சென்றான். அது மார்ச் மாதம். குளிர் காலம் முடிந்து, கோடைக்கால ஆரம்ப வேளை. ஆனால், எனக்கு குளிர் நடுங்கியது. காலை ஒன்பது மணி அளவில், சாப்பிட புறப்பட்டோம். ரொட்டி-சப்ஜியை ஒரு பிடி பிடித்தேன். ஐம்பது ரூபாய் பில் கொடுத்தான் என் அண்ணன், எனக்கு மட்டுமாம். அவன், அதே ஹோட்டலில் மாதம் 150 ரூபாயில் கணக்கு வைத்து, தினமும் இரண்டு வேளை சாப்பிடுவானாம். மற்றுமொரு ஆச்சிரியம். எப்போதோ, என் தந்தை “நீ, சம்பாதிப்பது உனக்கு சாப்பிடவே பத்தாது” என்று திட்டியது நினைவுக்கு வந்தது.
இப்படியாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் போபால் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் போது, மத்திய அரசாங்க அஞ்சல் மற்றும் தந்தி துறையில், இளநிலை பொறியாளர் வேலை கிடைத்து. 1983 ஆம் வருடம் பயிற்சி ஆரம்பித்தது. ஒருவருடம் போபாலில் கொஞ்சம் ஹிந்தி கற்றது உபயோகமாக இருந்தது. ஜபல்பூரில், ஒரு வருட பயிற்சிக்காலம், ஹிந்தி மொழியை நன்றாக கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தது. வடநாட்டு உணவும், பழக்க வழக்கங்களும் முழுவதுமாக தொற்றிக்கொண்டது. இந்தூரில், மூன்று வருட காலம் வேலை, பல நண்பர்களையும் அலுவலுக திறமையையும், அரசாங்க அறிக்கை மற்றும் சட்டங்களையும் பலருடனும் சகஜமாக பழகும் திறமையையும் என பல அனுபவம் அடைய வழி வகுத்தது. ஆங்கிலமும் வளமாக வரத்தொடங்கியது.
1986 ஆம் ஆண்டு, கார்நாடக மாநில தும்கூர் நகரில் வந்து இறங்கினேன். தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி சரளமாக தெரிந்து இருந்ததால், கன்னடம் கற்றுக்கொள்வது எளிதாக இருந்தது. பல தெலுங்குகாரர்கள் இருந்ததால், கொஞ்சம்-கொஞ்சம் தெலுங்கும் கற்றுக்கொண்டேன். பயணம் 1989 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் நோக்கி நகர, நான்கு வருட பணிக்காலத்தில் மலையாளமும் கற்றுக்கொண்டேன்.
1993 ஆம் ஆண்டு மீண்டும் கர்நாடகாவில் உள்ள மைசூருக்கு வந்து இறங்கினேன். என் மகன் எல் கே ஜி போகும் அளவுக்கு வளர்ந்து விட்டான். இனி, அவன் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும்வரை எங்கும் நகரக்கூடாது என்று முடிவு செய்து மைசூரிலேயே தங்கி விட்டேன். இப்போது அவன் தும்கூர் சித்தகங்கா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி காலேஜ்ல கட்டுமான துறையில் பொறியியல் படித்து வருகிறான்.
மீண்டும் பயணம் எங்கு நோக்கி என தெரியாது. அநேகமாக இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் மறுபடியும் பயணம் தொடங்கலாம்! 50 வயதை எட்டிக்கொண்டிருகிறேன்.
பல மொழிகள், பழக்கவழக்கங்கள், உணவுவகைகள், ஆடை அலங்காரங்கள், சம்பிரதாயங்கள், நடைமுறைகள், திரைப்படங்கள், திரைப்படப்பாடல்கள், கோவில்கள், பிரயாணங்கள், நண்பர்கள், மனித வள நிர்வாகம் என அனுபவம் கூடக்கூட, சிந்தனைகள் மற்றும் செயல்கள் மாறிக்கொண்டே வருகிறது.
இவ்வளவும் கொடுத்த, சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று மனம் துடிக்கிறது. அதன் விளைவே இந்த முயற்சி! my office server