1989 ஆம் ஆண்டு, முதன்முதலில் கணணியை கையாளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிருந்த கணணியில் ஹார்ட்டிஸ்க் கிடையாது. வெறும் பிளாப்பி மூலம்தான் கணணியை இயக்கவேண்டும். எம் எஸ் டாஸ் இயங்கு மென்பொருள் கொண்டு கணணியில் வேலை செய்து வந்த காலம். வேர்ட் ஸ்டார், டி-பேஸ், லோட்டஸ் என அடிப்படையிலான டெக்ஸ்ட் பப்ளிஷிங், டேட்டா மேனேஜ்மென்ட், ஸ்ப்ரெட்-ஷீட் மென்பொருட்களை தரமாக சொந்தத்தில் கற்று அறிந்தேன்.
அதே சமயத்தில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 3.1 ஐயும் (இது விண்டோஸ் 95 ஐ போல் அல்லாது எம் எஸ் டாஸ் மேல் இயங்கும்) கற்று அறிந்தேன். இதை தெரிந்துகொள்வதில் எனக்கு அதிக கஷ்டமாக இல்லை ஏனென்றால், இதற்கு முன்பே, நான் ஆப்பிள் மேகிண்டோஷ் கணணியை படித்து தெரிந்து கொண்டுவிட்டேன். எனவே, எனக்கு க்ராபிகல் யூசர் இன்டர்பேஸ் புதிதாக தெரியவில்லை. அது மட்டுமல்லாது, ஆப்பிளில், டெக்ஸ்ட் பப்ளிஷிங், டேட்டா மேனேஜ்மென்ட், ஸ்ப்ரெட்-ஷீட், பிக்சர் எடிட்டிங் மற்றும் லேசர் பிரிண்டரை கையாள்வது என 1990 ஆம் ஆண்டிலேயே எனக்கு சகஜமாகிவிட்டது.
இவைகளை எல்லாம் கற்ற பிறகு, முதன் முதலில், பேசிக் கணணி மொழியில் ப்ரோக்ராம் செய்வதையும் கற்றேன். பிறகு, பாஸ்கல், கோபால் போன்ற கணணி மொழிகளையும் கற்றேன். அதன் பிறகு, யுனிக்ஸ் இயங்கு தளம் மென்பொருளையும் கற்று தெரிந்துகொண்டேன். சி கணணி மொழியில் ப்ரோக்ராம் செய்வதையும் படித்து தெரிந்துகொண்டேன். 1993 ஆம் ஆண்டு, நான் இடமாற்றம் செய்துகொண்டு, மைசூருக்கு வரும்போது ஓரளவு கணணியில் தேர்ச்சி பெற்றவனாக வந்து இறங்கினேன்.
மைசூருக்கு வந்ததும், விண்டோஸ் என் டி 3.5 இயங்குதளம் அடிப்படையில் விண்டோஸ் 95 கணணிகளை கொண்டு, ஒரு லோக்கல் நெட்வொர்க் நிறுவினேன். மல்டிமீடியா லேப் மூலம், எங்கள் பிராந்திய தொலைதொடர்பு பயிற்சி நிலையத்தில் கணணி சம்பந்தப்பட்ட பல பாடங்கள் நடத்தி, எங்கள் துறை சார்ந்த பல்வேறு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வந்தேன். எம் எஸ் ஆபீஸ் மென்பொருளை முழுமையாக கற்று தெரிந்துகொண்டேன். அதே சமயத்தில், விஷுவல் பேசிக் கணணி மொழியை கற்று, விண்டோஸ் ப்ரோக்ராம் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டேன். விண்டோஸ் ஹெல்ப் கோப்புகள் செய்வது எப்படி என்றும் படித்து அறிந்தேன்.
1995 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு இணையதளம் வி எஸ் என் எல் என்ற பொதுத்துறை நிறுவனத்தால், அறிமுகம் செய்யப்பட்ட நேரம். அப்போதிலிருந்து இப்போது வரை இணையதளத்தில் உலாவி வருகிறேன்.
இணையதளம் சம்பந்தமான பல விஷயங்களை படித்தேன். இ-மெயில், வெப்-ப்ரௌசிங், வலைத்தளம் உருவாக்குவது, என அது சம்பந்தமான பல விஷயத்தை படித்து தெரிந்துகொண்டேன்.
பிறகு, ஓரகில் தரவுதள மென்பொருள், லினிக்ஸ் இயங்குதளம், பி ஹெச் பி ஸ்க்ரிப்டிங், என பல மென்பொருளை படித்தும், அதில் பயிற்சி அளித்தும் 2001 வரை பணிசெய்து வந்தேன். அப்போது எனக்கு பதவி உயர்வு கிடைத்து, இணையதள நிர்வாகம், நெட்வொர்க்கிங் சாதனங்கள் நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் நிர்வாகம் போன்ற வேலைகள் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சமயத்தில், நான் மைசூர் மாவட்ட அளவில், எங்கள் துறையில் உள்ள அனைத்து அலுவலுகங்களையும் இணைத்து ஒரு வைட் ஏரியா நெட்வொர்க் இண்ட்ராநெட் அமைத்து, அலுவலுக வேலைகளை எளிதில் செய்யும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கினேன். இதற்காக எங்கள் துறையின் “சஞ்சார் சாரதி” பட்டமும் பெற்றேன்.
நான்கு ஆண்டுகள் மைசூரிலேயே வேறு இடத்தில், பணி புரிந்த பின், மீண்டும் மைசூரில் உள்ள எங்கள் பிராந்திய தொலைதொடர்பு பயிற்சி நிலையத்தில் 2005 ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டு, இது சம்பந்தமான பாடங்கள் நடத்தி, எங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.
விண்டோஸ் 95, 98, மில்லினியம் எடிஷன், எக்ஸ் பி, விஸ்டா, விண்டோஸ் 7, யுனிக்ஸ், லினிக்ஸ், ஆப்பிள் என பல இயங்குதளம் மென்பொருள்கள், வேர்ட் ஸ்டார், டி-பேஸ், லோட்டஸ், எம் எஸ் ஆபீஸ், பேஜ் மேக்கர், போட்டோ ஷாப், ஓரகில், மைஎஸ்க்யுஎல், பி ஹெச் பி, விஷுவல் பேசிக், ஜாவாஸ்கிரிப்ட், சி எஸ் எஸ், ஹெச் டி எம் எல், எக்ஸ் எம் எல், விடியோ மற்றும் ஆடியோ எடிட்டிங், வெப் டிசைன் என பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களை சொந்தமாக படித்து தெரிந்து கொள்ள மற்றும் பயிற்சி அளிக்க என் துறை எனக்கு உதவியாக இருந்தது.
கணணியில் சின்னச்சின்ன வேலைகளுக்கு உபயோகிக்கும் பலவிதமான யுட்டிலிட்டி டூல்ஸ் என்று அழைக்கப்படும் பல்வேறு மென்பொருட்களையும் தெரிந்துகொண்டேன்.
இப்படியாக கடந்த இருபது வருடமாக, கணணி துறையில் ஓரளவுக்கு தொழில்நுட்ப அறிவு பெற்றுள்ளதால், உங்களுடன் அதை பகிர்ந்து உங்கள் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கும் முயற்சியே இந்த வலைதளத்தின் நோக்கம்.