லினிக்ஸ் சர்வர் – முகவுரை
லினிக்ஸ் (சில நேரங்களில் லைனக்ஸ் என்றும் உச்சரிக்கப்படுகிறது) ஒரு இயங்குதள மென்பொருள். (அதாவது ஆபெரடிங் சிஸ்டம் சாப்ட்வேர்). இந்த இயங்குதள மென்பொருள் பலவிதமான வன்பொருட்களில், அதாவது: டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், கைத்தொலைபேசி, வீடியோ கேம் கண்சோல், மெயின் ஃபிரேம் கம்ப்யூட்டர்கள், சூப்பர் கம்ப்யூட்டர் போன்ற பலதரப்பட்ட பிளாட்பாம்களில் உபயோகிக்கக்கூடிய ஒரு இலவச மென்பொருளாகும்.
1970 ஆம் ஆண்டில் யுனிக்ஸ் இயங்குதள மென்பொருள் பரவலாக உபயோகித்தல் இருந்த காலம். ஆனால், அதை விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலயில் இருந்தது. யுனிக்ஸ் ஒரு சர்வர் இயங்குதள மென்பொருளாக உபயோகத்தில் இருந்தது. இந்த தளத்தில், ஓரக்கில் என்ற தரவுத்தள (டேட்டாபேஸ்) மென்பொருள் கொண்டு பெரிய அளவில் டேட்டா மேனேஜ்மென்ட் செய்யப்பட்டு வந்தது. அந்தக்கால கட்டத்தில், இந்த இரண்டுமே எளிதில் எல்லோராலும் அளவளாவும் வகையில் இல்லை. அதிகம் கம்ப்யூட்டர் சம்பந்தமான அறிவு உடையவர்கள் மற்றும், இதில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமே இந்த இரண்டு (யுனிக்ஸ் மற்றும் ஓரக்கில்) மென்பொருட்களில் சாமர்த்தியமாக வேலை செய்யமுடியும் என்ற நிலை இருந்தது. யுனிக்ஸ் தளத்தில் பரவலாக, சி லாங்குவேஜ் மூலம், தேவையான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு வந்த காலம் அது. மேலும், யுனிக்ஸில் இன்றைய மைக்ரோசாப்ட் விண்டோஸ் தளத்தில் இருப்பதைப்போல் பலவிதமான, பலதரப்பட்ட மென்பொருட்கள், அன்றைய காலகட்டத்தில் இல்லை. ஆகையினால், யுனிக்ஸ் பெரிய கம்பெனிகள், மற்றும் அரசாங்க துறைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
1991 ஆம் ஆண்டு, லினஸ் தர்வல்ட்ஸ் என்பவர், யுனிக்ஸ் போல ஒரு இயங்குதள மென்பொருள் உருவாக்கியது, இன்று லினிக்ஸ் என்று, எல்லோராலும் பரவலாக உபயோகிக்கக்கூடிய, ஒரு பிரசித்திபெற்ற இயங்குதள மென்பொருளாக திகழ்கிறது! ஆரம்பத்தில், இதுவும் யுனிக்ஸ் போல, டெக்ஸ்ட் இன்டெர்ஃபேஸ் முறையில் கமாண்ட் கொடுத்து வேலை செய்யும் வகையில்தான் இருந்தது. ஆனால், படிப்படியாக முன்னேற்றம் அடைந்து, இன்று ஜி-யு-ஐ (கிராபிகள் யூசர் இன்டெர்ஃபேஸ்) மூலம், எளிதாக எல்லோராலும் உபயோகிக்க கூடியதாக இருக்கிறது.
லினிக்ஸ் பல்வேறு அடையாள பெயர்களில் இன்று திற மூல உரிமத்தின் அடிப்படையில் விநயோகிக்கப்படுகிறது. நீங்கள் இதை தம்தம் தளங்களில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்காலத்தில், வெறும் இயங்குதளமாக மட்டுமல்லாமல், பல்வேறு இலவச மென்பொருட்கள் சேர்ந்து ஒரு கலக்ஷனாக, குறுந்தகடாகவும் வெளியிடபடுகிறது. டெபியன், ரெட் ஹேட், சுசி, மேண்ட்ரேக் (தற்போது மேன்றிவா என்று அறியப்படுகிறது), உபண்டு, பெடோரா என்பன, பொதுவாக பரவலான, லினிக்ஸ் வினியோகம் என்பது பலரும் அறிந்ததே! இந்த தளங்களில் வேலை செய்யக்கூடிய, பல இலவச மென்பொருட்கள் சோர்ஜ்ஃபோர்ஜ்.நெட் என்ற தளத்தில் இருந்து இலவசமாக நீங்கள் பெறலாம்!
மேலும் அதிக விபரங்களுக்கு, விக்கிபீடியா தளத்தில் இந்த கட்டுரையை பார்க்கவும்.
என் லினிக்ஸ் அனுபவம்
நான் யுனிக்ஸ் பற்றி தெரிந்து கொண்டது, 1990 ஆம் ஆண்டு. அப்போது எங்கள் துறையில் கணனியில் அதிகம் தேர்ச்சி பெற்றவர்கள் மிகவும் குறைவானோர். டெலிபோன் பில் கணணிமயமாக்கப் பட்ட தருணம். அடிமட்டத்திலிருந்து ஒழுங்காக சொந்த முயற்சியில் யுனிக்ஸ் பற்றி படித்து, ப்ராக்டிகலாக தெரிந்து கொண்டேன். சி லாங்குவேஜ் படித்ததும் இந்த நேரத்தில்தான். பேஸ் ஸ்ட்ராங்கா இருந்தா பில்டிங் வீக் ஆகுமா? 2000 ஆம் ஆண்டு, முதன்முதலாக லினிக்ஸ் இன்ஸ்டால் செய்தது, ரெட் ஹேட். எங்கள் துறையில் உள்ளவர்களை படிப்பறிவிப்பது என் தொழில். இதை எங்கள் துறையில் உள்ளவர்களுக்கு லினிக்ஸ் பற்றி ஒரு அறிமுக விளக்கம் மற்றும் செயல்முறை விளக்கம் கொடுப்பதற்காக செட்அப் செய்தேன். பிறகு, டெபியன் லினிக்ஸில் ஒரு சர்வர் செட்டப் செய்து, வெப்-சர்வீசஸ், எப்டிபி, பிஹெச்பி, மைஎஸ்க்யுஎல் பற்றி விளக்கும் வகையில் வேலை வந்தது. உபுண்டு லினிக்ஸ் என் மகனிற்கு அவனுடைய காலேஜ் தேவைக்கேற்ப செட்அப் செய்தேன். தற்போது சுசி லினிக்ஸ்ஸில் என் அலுவலக தேவைக்கேற்ப, செட்அப் செய்து, எங்கள் இன்டராநெட் தளத்தையும் நிருவகித்து வருகிறேன். யுனிக்ஸ் பற்றி அடிப்படை அறிவு இருந்ததால், ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மாறி மாறி வேலை செய்வது சுலபமாக இருந்து.
இந்த இன்டராநெட் வேலை காரணமாகவும், எங்கள் உள்விவகாரங்களில் பிஹெச்பி மற்றும் மைஎஸ்க்யுஎல் கொண்டு ஒரு ப்ரோக்ராம் செய்து, அன்றாட வேலைகளை துரிதப்படுத்தி, சிறப்பாக செயல்பட செய்யவேண்டிய காரணமாகவும், ஒரு ஆறு மாத காலமாக என்னால் இந்த தளத்தில் பல கட்டுரைகளை எழுதமுடியாது போயிற்று. இருப்பினும், அதுவும் ஒரு நல்லதிற்குத்தான். ஏனென்றால், அனுபவப்பூர்வமாக இந்த கட்டுரைகள் எழுத அது உபயோகமுள்ளதாக இருக்கிறது.
பொதுவாக லினிக்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது
எல்லாவகையான லினிக்ஸ் விநயோகமும், திற மூல உரிமைகள் அடிப்படையில் வெளியிடபடுகிறது. ஆகையினால், ஹெல்ப் டாகுமெண்ட்களை படித்து பலவிஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையாக படித்து தெரிந்துகொள்ள ஆர்வமுடையவராக இருக்கவேண்டும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் பற்றி ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம் தரும் தளங்களைப்போல பலபேர்கள் தங்கள் தளங்களில் லினிக்ஸ் பற்றி அடிப்படையாக விளக்கம் கொடுக்க மாட்டார்கள். ஒரு சில ஹின்ட் கொடுப்பார்கள். அதிலிருந்து தொற்றிக்கொண்டு, நாம் மேலே படித்து, முயற்சி செய்து, நம்முடைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்களைப்போல் பல அனுபவம் உள்ளவர்கள் படிப்படியாக விளக்கங்கள் தரும் தளங்களை தமிழில் அமைத்து உதவ முன்வர வேண்டும். அல்லது என்னுடைய, கருத்து பரிமாற்றம் தளத்திற்கு அடிக்கடி விசிட் செய்து, மற்றவர்களுக்கு உதவுங்கள். இது என்னுடைய ஆசை மற்றும் வேண்டுகோள்.
1. எல்லாவிதமான லினிக்ஸ் விநயோகமும் ஒரேமாதிரியான கோப்பு மற்றும் அடைவு பெயர்களை கொண்டிருப்பதில்லை. எனவே, இதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் ஒரு பிரச்சினைக்காக தீர்வு தேடும்போது, உங்கள் லினிக்ஸ் வினயோகதிற்கு தகுந்தவாறு இந்த அடைவு, கோப்பு பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். இல்லையென்றால், ஒரு தளத்தில் நீங்கள் பார்க்கும் விடை உங்களுக்கு ஒத்துவராது என்று தோன்றும்.
2. ஒருவேளை, உங்கள் பிரச்சினைக்கு, மற்றொரு லினிக்ஸ் விநயோகத்தில் விடை கிடைத்தால், அடிப்படையாக அந்த (அல்லது அதுபோல) பிரச்சினையை எப்படி அணுகுவது என்று தெரிந்து கொண்டு, உங்கள் லினிக்ஸ் விநயோகத்தில் அந்த முறையை கையாண்டால் விடை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்.
3. மிகவும் அடிப்படையாக கேள்வி கேட்டால் பலரும் அதற்கு பதில் அளிப்பதில்லை. ஏனென்றால், ரெடி டு யூஸ் போல விடை தேடுபவர்களை லினிக்ஸ் கம்யுநிட்டியில் யாரும் விரும்புவதில்லை. நீங்கள் ஏற்கனவே செய்த முயற்சிகள் மற்றும் அணுகுமுறையை விளக்கிச்சொன்னால், பலபேர்கள் உதவ முன்வருவார்கள். லினக்ஸ் வந்ததே பலரின் முயற்ச்சியில்தான்.
4. சிலவேளைகளில் ஒரு பிரச்சினைக்கு தீர்வு உடனடியாக கிடைக்கும். பல்வேறு சமயங்களில் பலநாட்கள் ஆனாலும் நீங்கள் எதிர்பார்த்த விடையோ, விளக்கமோ கிடைக்காமல் போகலாம். அதிகம் முயர்ச்சிக்க வேண்டியிருக்கும்.
5. சிலநேரங்களில் வெளியீடு எண் (வெர்ஷன் நம்பர்) வித்தியாசமானதாக இருந்தாலும், உங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது போகலாம். சிலநேரங்களில், சம்பந்தமான ஏனைய மென்பொருட்கள் உங்கள் கணணியில் பொருத்தப்பட்டு இருந்தால் மட்டுமே, அந்த தீர்வினை அடையமுடியும் என்றிருக்கும். இதையும் கவனத்தில் கொண்டு, உங்கள் அணுகுமுறை இருக்கவேண்டும்.
6. வேண்டிய மென்பொருட்களை தளவிறக்கம் செய்யும்போது, உங்கள் லினக்ஸ் வினயோகதிற்கு பொருத்தமானதா என்று சோதித்து முயற்சி செய்து பாருங்கள்.
7. லினிக்ஸ் ஒரு சர்வர் ஆபிரேடிங் சிஸ்டம் என்பதால், உங்கள் புகுபதிகை சரியாக இருக்கவேண்டும். கோப்பு மற்றும் அடைவு இவைகளின் உரிமை மீறும்போது சில வேலைகளை செய்ய முடியாது.
முதலில், உங்கள் பிரச்சினைக்கு, சம்பந்தமான லினிக்ஸ் விநியோக தளத்தில், விடை தேடி பாருங்கள். நீங்கள் தேடும் தீர்வு கிடைக்காத பட்சத்தில், கூகுளில் தேடிப்பாருங்கள். இப்படியாக பல்வேறுவிதமான கோணங்களில் ஆலோசனை செய்து, முயற்சிக்க வேண்டும். இதை கருத்தில்கொண்டு உங்கள் அணுகுமுறை இருக்கவேண்டும்.
இதன் தொடர்ச்சியாக பகுதி 2 ஐயும படிக்கவும்.
நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பகுதி:- இணையம் ஒரு அறிமுகம் (இந்த பகுப்பில் உள்ள மற்றைய கட்டுரைகளுக்கு கீழேயுள்ள தொடரை சொடக்குக)
- ஒருங்குறியில் தமிழ் இணையதளம் அமைப்பது எதற்காக?
- ஒரு இணையதளம் அமைப்பது எப்படி? - பகுதி 1
- ஒரு இணையதளம் அமைப்பது எப்படி? – பகுதி 2
- வலைப்பதிவு மற்றும் இணையதளம் - இவற்றில் உள்ள வித்தியாசம் என்ன?
- இணையதளம் அமைக்க என்னென்ன ஆற்றல்கள் வேண்டும்?
- சொந்த தளப்பெயர் பதிவு செய்வது எப்படி?
- இணையதளம் நிறுவ வேண்டிய மென்பொருள் வன்பொருள் என்னென்ன?
- தளநிர்வாகம் சுலபமாக செய்வது எப்படி?
- ஸ்டேடிக் மற்றும் டைனமிக் பக்கங்கள் என்றால் என்ன?
- லினிக்ஸ் சர்வர் அமைப்பது எப்படி? பகுதி 1
- லினிக்ஸ் சர்வர் அமைப்பது எப்படி? பகுதி 2
Post a Comment